Friday, September 24, 2010

சூழலுக்காய் ஓர் எழுச்சி


விண்ணுக்குச் சென்றவர்கள் விட்டெறிந்த குப்பையெல்லாம்
மண்ணிற்கு படையெடுத்து மண்டலத்தை சுத்துதடா!
புண்ணுக்கு மருந்தடிக்க புகைபோக்கி இருந்தடிக்க
எண்ணத்து களங்கம்போல் இவ்வுலகில் குப்பையடா!

நகரம் என்றதும் நாறிடுங் கூவங்கள்
தகரம் எங்கணும் பங்கிடுஞ் சாதங்கள்
சிகரம் சிந்திடும் சிகரத்தின் சாரல்கள்
அகரம் என்பதற்குள் ஆர் உயிர்போகுமோ?

மைவழியாள் ‘சென்ரடிக்க’ மாப்பிள்ளைமார் காடழிக்க
பைவழியே பாலனுப்ப பாதரசம் சேர்ந்திருக்க
கைநழுவிப் போகுதடா! காடுகளும் வேகுதடா!
தையலவள் வெளிரிடையாய் தாஜ்மஹாலும் ஆனதடா!

இன்னொரு உலகம் உண்டோ சொல்
இருப்பதை கெடுப்பது முறையோ சொல்
விண்வெளி உனக்கு விருந்தோ சொல்
உன்னிடம் காத்திட உழைத்தே நில்.

சஞ்சீவிக்காக -13.12.1997

சாதனை ஓட்டம்!


சாதனையோட்டமிது; இவ்வுலகின்
  வேதனை யோட்டமிது!
போதனை யோட்டமிது;  பொய்யுலகின்
  பெரும்புகழ் ஓட்டமிது.

தீவிலிருந்து புறப்பட்டு
  திரண்டு யாழாலோடி
நாவில் தண்ணியற்று
  நாள்பல கிடந்துண்டு
சாவின் வழிம்பு என்று
  சாவகச் சேரி சேர்ந்து
ஏதும் உடமை யற்று
   எங்கெங்கே அலைந்திருந்தோம்.

பாவியெம் பழி துறந்து
  பாய்ந்தோடித் தோணி ஏறி
வன்னிக்காட்டு வனாந்தரங்கள்
   வளர்ந்த நல் மரங்கள் தாண்டி
பூவாசம் கிடைக்கும் என்று
   ‘பூந்தோட்ட’ முகாம் சென்றோம்.
நாய் வேச மென்னவென்று
   நல்லாய்த் தெரிந்துகொண்டோம்.

இது தான் நிலையென்றும்
  இன்னுமெம் முயிர் பிடித்து
ஊர் வாசம் காணவென்று
உலகெல்லாம் ஓடுகின்றோம்.

1996இல் எழுதிய ஒரு கவிதை