Sunday, October 3, 2010

ஒரு நாள் - ஒரு இரவு


அந்த வைத்திய சாலையில்
வயோதிபப் பயத்துடன்
வாழ்க்கையை ஓட்டும்
நோயாளிகள் கூட்டத்தில் ஒருவராய் - அன்று
என் தந்தையும் இணைந்திருந்தார்.

பனிப் போர்வைக்குள் அவர்களின்
பக்குவமான தூக்கம்
பார்ப்பதற்கு அழகாய்….
நேர்த்தியாய்

வளர்ந்து வந்த என் கனவுகள்
வழுக்கி விழுந்ததில்
முளிப்பு
இதனால் என் தமிழில்
விளிப்பு

கடந்துபோன நேரப்பெண்ணை
கடத்திப்பார்க்க அன்று
ஆசை…

வைத்தியசாலைக் குறிப்பேட்டில்
உருவிக்கொண்ட
அந்த ஒற்றைத்தாளில்
ஒட்டுக்குடித்தனமாய்
என் கவிதைகள்!
புனிதமான பூக்களின் புராணம்
பாடுகின்றேன்.

“பூக்களே..!
உங்களைப்போல் பிறக்க மட்டுமல்ல
இறக்கவும் ஆசை”

“இனிமையாகப் பிறக்க மட்டுமல்ல
வேதனை இல்லாமல் இறக்கவும்தான்”

நேர முட்களை சுகம் விசாரிக்கின்றேன்
அவை – நள்ளிரவுதாண்டி 2.40

கவிதை குழந்தைகளில்க்கூட
சிலவரிகள் தான் கடைசிவரை
ஓட்டி உறவாடுகின்றது
அப்படியான வரிகளில் இதுவும் இணைகின்றது.

சூரியனை விட ஆறுதலாக
அக்காவை பார்க்கின்றேன்
அதிகாலை விடிவோடு
ஆள்மாறும்
ஏற்பாடு…

காலை கடக்கின்றது
இன்னும் காணவில்லை காரிகையை

நேரம்
ஏழடித்து ஓய
இனந்தெரிந்த
இரண்டு இன சனங்கள்
வருகை…
இவர்களுக்கு இப்படி ஒரு கடமை உணர்வா!
காலையே தந்தையை காணவரும் அவசரமா?
புரியாமல் புல்லரிக்கின்றேன்.

இருவரில் ஒருவர்
இந்திரன் மாமா
இதமாய் அழைத்து சொன்னார் சேதி
“அம்மாவுக்கும் எல்லோ
ஆஸ்மா கூடிட்டுது”

ஆடியே போட்டேன்
இருந்தும் விடவில்லை.

“அதுக்கு என்ன
ஆஸ்பத்திரியில் சேர்ப்போம்”

அவசரமாய்ப்புறப்பட்டேன்
அதைவிட அவசரமாய்
அவர் சொன்னார்
ஆள் Past (பாஸ்ட்)
ஆங்கிலம் எனக்கு புரிவதாக இல்லை
அதனது அர்த்தமும் விளங்கிவிடவில்லை.

“அதுக்கு என்ன
ஆஸ்பத்திரியில் சேர்ப்போம்”
மீண்டும் அதையே சொன்னேன்.

வாசல்வரை வந்தும் விட்டேன்
வரவேற்க அங்கே
அம்மா இல்லை.

எங்கே அம்மா?
எங்கே
என்னைக் கண்டும்?
இன்னும் தூக்கமா?
எப்படி அம்மா
உன்னால் முடியும்
………………….
………………….
………………….
(இவ் உணர்வுக்கு
இன்னும் என் அகராதியில் வார்த்தை இல்லை)
அழுகையில் புதைந்து அக்கா வந்தா
………………….
………………….
………………….

தம்பி!
2.40 இருக்கும் அம்மா!
பூவைப்போல உதிர்ந்துதான் போன “புண்ணியமான நல்ல சாவு”
யாரோ பாட்டி நழுவலாய் சொன்னார்.
…………………
…………………
…………………

இன்றும் நினைக்கின்றேன்…
என் கடைசித் துருப்புச்சீட்டும்
எனைக் கைவிட்டுச்சென்ற அந்த
ஒரு நாள் ஒரு இரவை.

ஓன்று மட்டும் நிச்சயம்
கவிதை
நினைத்தால் வருவதல்ல
நெஞ்சம்
கனத்தால் வருவது.
கவிதை
அறிவுபூர்வமானது
மட்டும் அல்ல
உணர்வுபூர்வமானதும் கூட.

இதனால்……
இத்துடன் நிறுத்தி விடுகின்றேன்
என் கவிதைகளை
ஏன் எனில்
என்
உணர்வுகள் தொலைந்த பின்னும்
எழுதுதல்
உத்தமமானதாய் எனக்கு படவில்லை
இதுதான் என் இறுதி…
கவிதாஞ்சலி.

No comments:

Post a Comment